பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி; 140 பேர் பலி - தேசிய பேரிடராக அறிவிப்பு

  தினத்தந்தி
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி; 140 பேர் பலி  தேசிய பேரிடராக அறிவிப்பு

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கல்மேகி சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. சிபுவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நகரங்களுக்குள் புயல் புகுந்தது. இந்த புயல் தாக்குதலின்போது, கார்களும், ஆற்றங்கரையோர வீடுகளும் மற்றும் பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கின் வேகம் காணப்பட்டது. லிலோன் நகரில் 35 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. கார்கள் ஒன்றன் மீது ஒன்று என கிடந்தன. கட்டிடங்களின் மேற்பகுதிகள் இடிந்து விழுந்திருந்தன. இதனையடுத்து, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி பெர்டினண்ட் மார்கோஸ் தேசிய பேரிடராக இதனை அறிவித்து உள்ளார். இதனால், நிவாரண உதவிக்கான நிதியை அரசு ஒதுக்க முடியும். அதனுடன் அத்தியாவசிய பொருட்களுக்கான அடிப்படை விலை நிர்ணயமும் செய்ய முடியும். புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைனைஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர். இந்த சூறாவளி புயல், சிபு மற்றும் நீக்ரோஸ் ஆகிய தீவுகளை தாக்கி விட்டு கடலுக்கு திரும்பி விட்டது என தகவல் தெரிவிக்கின்றது. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்த புயல் தாக்குதலுக்கு இதுவரை 140 பேர் பலியாகி உள்ளனர்.

மூலக்கதை