சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி

  தினத்தந்தி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி

சிவகாசி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி அப்துல்ஜலில், அஷ்மாகாத்துன் ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் தீப்பெட்டி ஆலையின் அருகில் உள்ள சாரதா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் அஷ்மாகாத்துன் 5-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அப்துல் ஜலில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அழகான பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள், சிவகாசி சுகாதாரப்பிரிவுக்கு ரகசிய தகவல் அளித்தனர். அதன் பேரில் கிராம செவிலியர் கிரேஸ் நேரில், விசாரணை நடத்தினார். இதில் அஷ்மாகாத்துனுக்கு வீட்டில் பிரசவம் நடந்தது உறுதியானது. இதை தொடர்ந்து அவரை மீட்ட கிராம செவிலியர், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்று அங்கு தாய்க்கும், குழந்தைக்கும் முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக கூறப்படுகிறது. அசாம் மாநில பெண்ணுக்கு பிரசவம் நடந்தது குறித்து மேல்அதிகாரிகளுக்கு நர்சு கிரேஸ் தகவல் கொடுத்தபோது, வீட்டில் பிரசவம் நடந்ததை மறைத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் நடந்ததாக தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் நடக்கவில்லை என்பது உறுதியானது. பின்னர் சுகாதார பிரிவு அதிகாரிகள், அப்துல்ஜலீலிடம் விசாரணை நடத்தினர். இதில் தன் மனைவிக்கு ஏற்கனவே பிறந்த 4 குழந்தைகளும் அசாம் மாநிலத்தில் உள்ள தங்கள் வீட்டில் வைத்து பிறந்ததாகவும், அந்த 4 பிரசவங்களையும் தானே பார்த்தாகவும் அதிர்ச்சி தகவலை அப்துல் ஜலீல் அதிகாரிகளிடம் கூறியதுடன், அதனால்தான் 5-வது பிரசவத்துக்கும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். பின்னர் கிராம செவிலியர் கிரேசிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உண்மையான தகவலை மறைத்து தவறான தகவல் தந்ததற்காக அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சிவகாசி சுகாதார துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் மேல்அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அசாம் மாநில பெண்ணுக்கு வீட்டிலேயே அவரது கணவர், 5 பிரசவங்கள் பார்த்த தகவல் சிவகாசி பகுதியில் பேசுபொருளாகவும் மாறி உள்ளது.

மூலக்கதை