டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்

புதுடெல்லி, டெல்லியை சேர்ந்த தீபக் கோடா (வயது 33) என்பவர் டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள தலைமை செயலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதிய இடைவேளையின்போது தனது அலுவலகத்தின் 7-வது மாடியில் பால்கனி பகுதியில் நின்று தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கே சுற்றி திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று திடீரென 7-வது மாடிக்கு தாவி குதித்து தீபக்கை கடித்து குதற தொடங்கியது. இதனால் வலியில் அலறி துடித்த தீபக் உயிர் பயத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் கை, கால்கள் உடைந்து படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் குரங்கு தாக்கிய பயத்தில் கீழே விழுந்து விட்டாரா? அல்லது தற்செயலாக நடந்து விட்டதா? என விசாரணை நடந்து வருகிறது. அரசு கட்டிடங்களில், இதுபோன்று வனவிலங்கு தாக்குதல்கள் நடைபெறுவது பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் கேள்வி எழுப்பியுள்ளது.
மூலக்கதை
