மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி

  தினத்தந்தி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி

கொச்சி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரன்(வயது 50). வியாபாரியான இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொச்சி அருகே குன்னத்துநாடு கிராமத்தை அடுத்த வெங்கோலா பகுதியில் வசித்து வந்தார். இவரது மகளின் திருமணம் இன்னும் ஒருவாரத்தில் நடக்க உள்ளது. இதற்காக வீட்டில் 15 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேந்திரன் மாயமானார். அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று குடும்பத்தினருக்கு தெரியாமல் இருந்தது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் மாயமான நிலையில், வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், 15 பவுன் நகைகளும் காணாமல் போயிருந்தது. அப்போது தான் சுரேந்திரன் மகள் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றிருந்தது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து எர்ணாகுளம் புறநகர் போலீசில் இதுபற்றி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சுரேந்திரனை தேடினர். மேலும் தொடர்ந்து போலீசாரும், அவரது குடும்பத்தினரும் அவருடைய செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது செல்போன் ஆன் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சுரேந்திரன் தனக்கு வந்த எந்த அழைப்புகளையும் எடுத்து பேசாமல் இருந்தார். இந்த நிலையில் வேறொரு எண்ணில் இருந்து அவர் தனது மகளின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான் பத்திரமாக இருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்றும் தெரிவித்தார். பின்னர் மகள் கதறி அழுது கேட்டுக் கொண்டதால் அவருடைய திருமணத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார். இதற்கிடையே சைபர் கிரைம் போலீசார் மூலம் சுரேந்திரன் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். அதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்தனர். அப்போது அவருடன் ஒரு பெண் இருந்தார். அது சுரேந்திரனின் கள்ளக்காதலி என்பதும், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு அங்கு அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் சுரேந்திரனை கைது செய்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.70 லட்சம் ரொக்கத்தை மீட்டனர். அவரது கள்ளக்காதலியை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை