‘தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்’ - டிரம்ப் திட்டவட்டம்

  தினத்தந்தி
‘தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்’  டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன், ஜி20 உச்சி மாநாட்டை ஓவ்வொரு ஆண்டும் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் தலைமையேற்று நடத்துகின்றன. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜி20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் இருந்தது. தொடர்ந்து 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் 18-வது ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தியது.அந்த மாநாட்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையில், இந்தியாவின் தலைமையின்கீழ் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2024-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தொடங்கி, அடுத்த ஓராண்டுக்கு ஜி20 தலைமைப் பொறுப்பை தென்ஆப்பிரிக்கா ஏற்றுக்கொண்டது. இதன்படி வரும் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தென்ஆப்பிரிக்காவின் தலைமையில் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இது ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ள முதல் ஜி20 உச்சிமாநாடு ஆகும். இந்த நிலையில், தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தென்ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. நான் அதில் பங்கேற்க மாட்டேன். தென்ஆப்பிரிக்கா இனி ஜி20 கூட்டமைப்பில் கூட இருக்கக் கூடாது. ஏனெனில் அந்நாட்டில் நடக்கும் விஷயங்கள் மோசமாக உள்ளன. அங்கு அந்த உச்சிமாநாடு நடைபெறக் கூடாது. நான் செல்லமாட்டேன் என்பதை அவர்களிடம் சொல்லிவிட்டேன். தென்ஆப்பிரிக்காவில் எங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை