‘இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை..’ - பிரேசில் மாடல் அழகி வெளியிட்ட வீடியோ

  தினத்தந்தி
‘இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை..’  பிரேசில் மாடல் அழகி வெளியிட்ட வீடியோ

பிரேசிலியா, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக நேற்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் இது தொடர்பாக ‘ஹெச் பைல்ஸ்’ (H Files) என்ற பெயரில் பல்வேறு ஆதாரங்களை ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “அரியானா வாக்காளர் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர். தவறான வாக்காளர்கள், போலி முகவரிகள், கும்பல் வாக்காளர்கள் என ஏராளமான முறைகேடுகள் நிறைந்துள்ளன. பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் (அவரின் புகைப்படத்தையும் ராகுல் காந்தி வெளியிட்டார்) ராய் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் இடம்பெற்று இருக்கிறது. மாநிலத்தில் 25 லட்சம் போலி வாக்காளர் பதிவுகளில் இவர் ஒருவர். இது ஒரு மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டுக்கான சான்றாகும்” என்று தெரிவித்தார். இதற்கிடையில், ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த பிரேசில் மாடல் அழகி லாரிசா ரோச்சா சில்வா குறித்து இணையத்தில் பலரும் தேடத் தொடங்கினர். அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் முகவரியை கண்டறிந்து, அவருக்கு பலர் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- “இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய புகைப்படம் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, எனது உடன்பாடு இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் இந்தியாவுக்கு சென்றது கூட இல்லை. நான் பிரேசிலில் சமூக வலைதள பிரபலமாக அறியப்படுகிறேன். மேலும் சிகையலங்கார நிபுணராகவும் இருக்கிறேன். மேலும் இந்திய மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்ஸ்டாகிராமில் என்னை புதிதாக பின்தொடரும் இந்தியர்களை வரவேற்கிறேன். இப்போது என்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக தெரிகிறது. நான் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதைப் போல் ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர். அது நான் அல்ல, அது என்னுடைய புகைப்படம் மட்டுமே. அந்த புகைப்படத்தில் எனது வயது 18 அல்லது 20 இருக்கும் என நினைக்கிறேன். மக்களை ஏமாற்றுவதற்கு எனது பழைய புகைப்படத்தை சிலர் பயன்படுத்தியதாக தெரிகிறது. இது என்ன பைத்தியக்காரத்தனம்? எப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் பார்ப்பதற்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்தவள் போல் இருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் என்னை இந்தியர் போல் காட்டி, மக்களை ஒருவரோடு ஒருவர் சண்டை போட வைத்துள்ளனர். இதற்கிடையில் சில இந்தியர் செய்தியாளர்கள் என்னை தொடர்பு கொண்டு இது குறித்து பேட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றனர். நான் ஒரு சாதாரண பெண்தான், சர்ச்சைக்குரிய பிரேசில் மாடல் கிடையாது என்று கூறிவிட்டேன். அதே சமயம் எனது விவரங்களை பார்த்து தெரிந்து கொண்டு, அவற்றை மொழிபெயர்த்து இந்திய ஊடகங்களுடன் பகிர்ந்து வரும் அனைவரின் கருணையையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் மொழி எனக்குத் தெரியாது, ஆனால் உங்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எனக்கு இந்திய மொழி தெரியாது. நமஸ்தே என்ற வார்த்தை மட்டும் தெரியும். மேலும் சில வார்த்தைகளை கற்றுக்கொண்டு உங்களிடம் நான் பேசுகிறேன். இந்தியாவில் விரைவில் நான் பிரபலமாகப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை