200 பேர்களின் உடைமைகளை தவறவிட்ட விமானம் - 3 நாட்களாகியும் கிடைக்காததால் பயணிகள் விரக்தி

  தினத்தந்தி
200 பேர்களின் உடைமைகளை தவறவிட்ட விமானம்  3 நாட்களாகியும் கிடைக்காததால் பயணிகள் விரக்தி

துபாய், துபாயில் இருந்து லக்னோ நகருக்கு தினசரி விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்கி வருகிறது. இதில் கடந்த 3-ந்தேதி நள்ளிரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஐ.எக்ஸ்-198 என்ற விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு லக்னோவில் தரையிறங்கியது. பின்னர், விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் தங்கள் உடைமைகளை பெற்றுக்கொள்ளும் பகுதிக்கு சென்றனர். ஆனால் உடைமைகள் வரும் பெல்ட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் இதற்கு முந்தைய விமானமான ஐ.எக்ஸ்-194 என்ற விமானத்திற்கான உடைமைகள் அங்கு வந்து கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகளிடம் எங்கள் உடைமைகள் எங்கே? என கேட்டுள்ளனர். அதற்கு உங்கள் உடைமைகள் சில காரணங்களால் துபாயிலேயே தவற விடப்பட்டது. அடுத்த 12 மணி நேரத்தில் வந்து விடும் என கூறி சமாதானப்படுத்தினர். ஆனால் சிலர் அசாம்கர் மற்றும் கான்பூர் போன்ற தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அங்கு சென்று திரும்புவது கடினம் என்பதால் பலர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக 12 மணி நேரத்தை கடந்தும் உடைமைகள் வரவில்லை. இதில் வேடிக்கையாக தனது உறவினர் திருமணத்திற்காக சென்ற பயணி சரி விமானத்தில்தானே செல்கிறோம். அங்கு சென்றதும் புதிய ஷெர்வானி, காலணிகளை அணிந்து பரிசுகளை எடுத்து செல்வோம் என எண்ணி அனைத்தையும் தனது உடைமையிலேயே வைத்துள்ளார். இந்த நிலையில் துபாயிலேயே அவரது உடைமை இருந்ததால் தான் அணிந்திருந்த டி-சர்ட், டிராக் பேண்ட்டுடன் திருமணத்திற்கு சென்றதாக மனம் நொந்தபடி புகார் அளித்துள்ளார். இதில் மொத்தம் 200 பயணிகள் பாதிக்கப்பட்டு புகார் அளித்துள்ளதாக லக்னோ விமான நிலையம் தகவல் அளித்துள்ளது. 3 நாட்கள் ஆகியும் இன்னும் உடைமைகள் துபாயில் இருந்து கொண்டு வராததால் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் மிகவும் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

மூலக்கதை