400 விக்கெட்களின் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோனி: சர்வதேச அளவில் 4வது வீரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
400 விக்கெட்களின் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோனி: சர்வதேச அளவில் 4வது வீரர்

* எய்டன் மார்க்ரமை ஸ்டைலாக ஸ்டம்பிங் செய்தார்

கேப் டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில், அந்த அணியின் தற்காலிக கேப்டன் எய்டன் மார்க்ரமை, டோனி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்க செய்தார். குல்தீப் யாதவின் பந்தில், க்ரீஸை விட்டு லேசாக வெளியே வந்து விளையாடியபோது, டோனி தனது வழக்கமான ஸ்டைலில் மின்னல் வேகத்தில் அவரை ஸ்டம்பிங் செய்து விட்டார்.

இதன்மூலம் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஒரு நாள் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோனிதான்.

சர்வதேச அளவில் பார்த்தால், 4வது விக்கெட் கீப்பர். தனது 315வது ஒரு நாள் போட்டியில் டோனி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



இந்த பட்டியலில், இலங்கையின் குமார சங்ககரா முதலிடத்திலும் (404 போட்டிகளில் 482 விக்கெட்கள்), ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (287 போட்டிகளில் 472 விக்கெட்கள்) 2ம் இடத்திலும், தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் (295 போட்டிகளில் 424 விக்கெட்கள்) 3ம் இடத்திலும் உள்ளனர். டோனி 4வது இடத்தில் உள்ளார்.

அவர் தற்போது வரை 315 ஒரு நாள் போட்டிகளில், 295 கேட்ச், 106 ஸ்டம்பிங் என மொத்தம் 401 விக்கெட்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்.

இதில், குமார சங்ககரா, ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் ஆகியோர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், டோனி இன்னமும் விளையாடி கொண்டிருக்கிறார்.

எனவே மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. ஒரு நாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டோனி படைத்தார் என்பது நினைவிருக்கலாம்.



.

மூலக்கதை