பட்டினியில்லா நாடுகளின் பட்டியலை வெளியிட்ட உலக உணவு கொள்கை ஆய்வு மையம்!

என் தமிழ்  என் தமிழ்
பட்டினியில்லா நாடுகளின் பட்டியலை வெளியிட்ட உலக உணவு கொள்கை ஆய்வு மையம்!

பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப்பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன.

ஆப்பிரிக்க குடியரசு நாடுகள் 43.5 முதல் 50.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இதனால் மோசமான பட்டினி கொடுமையால் அவதிப்படும் நாடுகள் என பட்டியலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன

இந்தப் பட்டியலில் 31.4 மதிப்பெண்களுடன் இந்தியா 100வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே அதிக உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தியா பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 97வது இடத்தைப் பிடித்திருந்தது

உலக உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டினியால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார தடை உள்ளிட்டப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாக்கூட இந்தியாவுக்கு முன் 93 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாள் 72வது இடத்தையும், மியான்மர் 77வது இடத்தையும் பங்களாதேஷ் 88வது இடத்தையும் இலங்கை 84வது இடத்தையும் சீனா 29வது இடத்தையும் பிடித்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் கூட இந்தியாவை விட பட்டினியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பட்டியில்லா நாடுகளின் பட்டியலில் ஈராக் 78 வது இடத்தை பிடித்துள்ளது. நமது பங்காளி நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 106வது இடத்தைப் பிடித்துள்ளது.

2000வது ஆண்டிலிருந்ததைவிட தற்போது 27 சதவீதம் பட்டினி எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறியுள்ள உலக உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், தற்போது உலகம் முழுவதும் 9 பேரில் ஒருவர் உணவில்லாமல் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை