டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு

  தினத்தந்தி
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு

சென்னை,வங்கக்கடலில் உருவான ’டிட்வா’ புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை நிலவரப்படி வேதாரண்யத்துக்கு தென் கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு, தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 230 கி.மீ. தொலைவிலும் இருந்து வருகிறது. இதன்காரணமாக வடமாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடி, கடல் பகுதியிலேயே வலுவிழந்துவிடும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக மழையின் தாக்கம் குறைந்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக நாகை, காரைக்கால், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. அதைபோல சென்னை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி ஆகிய 5 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. புயல் காரணமாக சென்னை மெரினாவில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்குள் மக்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மூலக்கதை