சிந்து, சாக்ஷி, தீபாவுக்கு கேல் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

தினமணி  தினமணி
சிந்து, சாக்ஷி, தீபாவுக்கு கேல் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், இறுதிச்சுற்றுவரை முன்னேறிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கெளரவித்தார்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, "விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான தேசிய விருது' வழங்கும் நிகழ்ச்சி, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாசார்யா, தியான்சந்த் உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவற்றை வழங்கி கெளரவித்தார்.

இதில், ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் 4-ஆவது இடம் பிடித்த தீபா கர்மாகர் ஆகியோர் கேல் ரத்னா விருது பெற்றனர்.

அவர்களுடன், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராயும் கேல் ரத்னா விருது பெற்றார்.

அவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும், ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

முதல் முறை: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 4 பேருக்கு வழங்கப்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக கடந்த 2009-ஆம் ஆண்டு குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் சுஷீல் குமார் ஆகிய மூவருக்கு கேல் ரத்னா விருது ஒரே சமயத்தில் வழங்கப்பட்டது.

அர்ஜுனா விருது: ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் 10-ஆவது இடம் பிடித்த லலிதா பாபர், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவருமான சிவ தாபா, ஹாக்கி வீரர் ரகுநாத், வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அவர்களோடு, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஆடவர் கால்பந்து அணி கோல்கீப்பர் சுப்ரதா பால், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபூர்வி சந்தேலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோரும் அர்ஜுனா விருது பெற்றனர். ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று காலில் காயம் அடைந்துள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், சக்கர நாற்காலியில் வந்து விருதை பெற்றுக் கொண்டார்.

அவர்கள் அனைவருக்கும் வெண்கலச் சிலையிலான விருது, ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் நீரஜ் சோப்ரா, 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹானே பங்கேற்கவில்லை: இவர்களோடு, இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்ய ரஹானேவுக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க அவர் அமெரிக்கா சென்றுள்ளதால், விருது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

துரோணாசார்யா விருது: இந்த ஆண்டுக்கான துரோணாசார்யா விருதை, ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகரின் பயிற்சியாளர் விஸ்வேஷ்வர் நந்தி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் கோலியின் தனிப் பயிற்சியாளர் ராஜ் குமார் சர்மா ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

அவர்களோடு, நாகபுரி ரமேஷ் (தடகளம்), சாகர் மால் தயாள் (குத்துச்சண்டை), பிரதீப் குமார் (நீச்சல்), மஹாவீர் சிங் (குத்துச்சண்டை) ஆகியோரும் துரோணாசார்யா விருது பெற்றனர்.

அவர்களுக்கு, வெண்கலச் சிலையிலான விருது, ரூ.7 லட்சம் ரொக்கப் பரிசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது: விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தடகள வீராங்கனை சத்தி கீதா, ஹாக்கி வீரர் சில்வனஸ் டங் டங், துடுப்புப் படகு வீரர் ராஜேந்திர பிரகலாத் ஷெல்கே ஆகியோருக்கு தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தியான்சந்த் விருது வென்றோருக்கு, ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, பட்டயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

 

2016-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வென்றவர்கள்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

பி.வி.சிந்து (பாட்மிண்டன்), தீபா கர்மாகர்

(ஜிம்னாஸ்டிக்ஸ்),

ஜிது ராய் (துப்பாக்கி

சுடுதல்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்).

தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது

சத்தி கீதா (தடகளம்),

சில்வனஸ் டங் டங் (ஹாக்கி), ராஜேந்திர

பிரகலாத் ஷெல்கே

(துடுப்புப் படகு).

அர்ஜுனா விருது

ரஜத் செளஹான்

(வில்வித்தை), லலிதா பாபர்

(தடகளம்), செளரவ் கோத்தாரி

(பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர்),

சிவ தாபா (குத்துச்சண்டை), அஜிங்க்ய ரஹானே (கிரிக்கெட்),

சுப்ரதா பால் (கால்பந்து),

ராணி ராம்பால் (ஹாக்கி),

ரகுநாத் (ஹாக்கி), குருபிரீத் சிங்

(துப்பாக்கி சுடுதல்), அபூர்வி

சந்தேலா (துப்பாக்கி சுடுதல்),

செளம்யஜித் கோஷ் (டேபிள்

டென்னிஸ்), வினேஷ் போகத்

(மல்யுத்தம்), அமித் குமார்

(மல்யுத்தம்), சந்தீப் சிங் மான்

(பாரா தடகளம்), வீரேந்தர் சிங்

(மல்யுத்தம்)

துரோணாசார்யா விருது

நாகபுரி ரமேஷ் (தடகளம்), சாகர் மால் தயாள் (குத்துச்சண்டை), ராஜ் குமார் சர்மா (கிரிக்கெட்), விஸ்வேஷ்வர் நந்தி (ஜிம்னாஸ்டிக்ஸ்), பிரதீப் குமார் (நீச்சல்), மஹாவீர் சிங் (குத்துச்சண்டை).

 

மூலக்கதை