இன்றைய அரசியலில் தர்மமே இல்லை! ராகவா லாரன்ஸ்

தினமலர்  தினமலர்
இன்றைய அரசியலில் தர்மமே இல்லை! ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு போராட்டம், அறக்கட்டளை மூலம் உதவி, அம்மாவுக்கு கோவில், விவசாயி குடும்பத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய் உதவி போன்ற பரபரப்புக்கு இடையே, விரைவில் வெளியாகவுள்ள, மொட்ட சிவா கெட்ட சிவா படம் பற்றியும், தன் தனிப்பட்ட விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராகவா லாரன்ஸ்:

மொட்ட சிவா கெட்ட சிவா பற்றி...

முழுக்க முழுக்க, இது ஒரு கமர்ஷியல் படம். இதுவரை பேய் படங்களில், அம்மாவின் இடுப்பில் அமர்ந்து, பயந்து நடிச்சிட்டிருந்தேன். இப்போது, போலீஸ் கேரக்டரில், அடாவடியாக ஒரு படம் பண்ணியிருக்கிறேன். எம்.ஜி.ஆர்., பாடலான, ஆடலுடன் பாடலை கேட்டு, என்ற பாடலை,'ரீ - மிக்ஸ்' செய்திருக்கிறோம். முதல் காட்சியில் துவங்கி, கடைசி வரை காமெடியாக இருக்கும்.

ராய் லட்சுமிக்கு உங்கள் படங்களில் முக்கியத்துவம் தருவது ஏன்?

இப்படி ஒரு கேள்வி வரும் என, ஏற்கனவே நினைத்தேன். ஹர ஹர மகாதேவகி பாடல் ரெடியானதும், இதில் ராய் லட்சுமி ஆடினால் நன்றாக இருக்கும் என, பலரும் கருத்து தெரிவித்தனர். ஹீரோயினாக நடிக்கும் லட்சுமியை, எப்படி ஒரு பாடலுக்கு மட்டும் ஆட அழைப்பது என, தயக்கம் வந்தது. முதலில், இயக்குனர் பேசினார். அதன்பின், அந்த பாடலை, லட்சுமிக்கு அனுப்பி வைத்தேன். பாடலை கேட்டதுமே, நடிக்க சம்மதித்து விட்டார்.

உங்களின் அடுத்த திட்டம்?

அம்பத்துாரில், 13 அடியில் காயத்ரி மாதா சிலை; அதன் கீழே, அம்மா சிலை; அதாவது, காயத்ரி மாதா தான், எனக்கு அம்மாவாக பிறந்து இருக்காங்க என்பதை உலகிற்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்; அதற்காகவே, இந்த சிலைகளை திறக்கவுள்ளேன்.

சுய விளம்பரத்துக்காக, நீங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறதே?

அதை பற்றி எனக்கு தெரியாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழன் என்ற ஒரு உணர்வுடன் பங்கேற்றேன். என்னால் முடிந்த உதவிகள் செய்தேன். எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, இளைஞர்கள், பாசத்துடன் கவனித்துக் கொண்டனர். இந்த விஷயத்தில், இளைஞர்கள், நடிகர்கள் என ஏன், பிரித்து பார்க்க வேண்டும்.

உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா?

அரசியலில் இருந்தால், அரசு பணத்தை எடுத்து, மக்களுக்கு செலவிட வேண்டும். ஆனால், என் வியர்வையை சிந்தி சம்பாதித்த, ஒரு கோடி ரூபாயை மக்களுக்காக செலவு செய்தால், அது, எனக்கு ஒரு சந்தோஷத்தை தருகிறது. இப்போது வரை, எனக்கு அரசியல் புரியவில்லை. அரசியல், தர்மம் இல்லாத ஒரு இடமாகவே தெரிகிறது. அறக்கட்டளை மூலமாக, இதுவரை, 135 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம். ஏராளமான குழந்தைகளை படிக்க வைக்கிறோம். இதையெல்லாம், அரசியல் நோக்கத்துடன் செய்வது இல்லை. எனக்கு சிலர் உதவி செய்கின்றனர்; அதன் மூலம், நானும் உதவி செய்கிறேன். பல ஆண்டுகளாக இதை செய்கிறேன். கண்டிப்பாக, அரசியல் நோக்கத்துடன் இதைச் செய்யவில்லை.

உங்கள் கனவு ?

அன்னை தெரசாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கலாம் அய்யாவை பிடிக்கும். அவங்க அளவுக்கு என்னால், பெயர் எடுக்க முடியாது. ஆனால், 'லாரன்ஸ் என ஒருத்தர் இருந்தார்; அவர், நிறைய பேருக்கு உதவி செய்தார்' என, எதிர்கால சந்ததியினர் சொல்ல வேண்டும். அதற்காகவே, இவ்வளவு சிரமப்படுகிறேன். நல்லவனாக வாழ வேண்டும்; நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டும் தான், என் கனவு, லட்சியம் எல்லாம்.

இன்னும், 10 ஆண்டுகளில், லாரன்ஸ், அமைச்சராகி விடுவாரா?

புட்டபர்த்தி சாய்பாபா பண்ணாத உதவிகளா; அதற்காக, அமைச்சராக வேண்டும் என, அவர் ஆசைப்பட்டாரா? நான் நடிகன் என்பதால், இப்படி வருவாரோ, அப்படி வருவாரோ என, எல்லாரும் நினைக்கின்றனர். இது தான், எனக்குள்ள பெரிய பிரச்னை. என்றைக்குமே அரசியலுக்கு வர, நான் ஆசைப்பட்டது இல்லை.

மூலக்கதை