மகிந்திரா அண்ட் மகிந்திரா 7 வாகனங்கள் அறிமுகம்
புதுடில்லி : மகிந்திரா நிறுவனம், பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் பிரிவில், ஏழு புதிய வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர் விரும்பும் வகையில், வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது, நான்கு பயணிகள் வேன் மற்றும் மூன்று வர்த்தக வாகனங்கள் என, மொத்தம், ஏழு வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. ‘சுப்ரோ’ என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய வேனின் விலை, 4.71 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளது. சுப்ரோ மினி டிரக் என்ற வாகனத்தின் விலை, 4.28 லட்சம் ரூபாயாக உள்ளது. ஏழு புதிய வாகனங்களும், நவீன தொழில்நுட்பத்தில், அழகிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றின் விலையும், வாங்கும் அளவில் உள்ளது. இதன் மூலம், எங்கள் நிறுவனத்தின் புதிய வாகனங்களை வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.