ஆவணஞானி குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் மறைவிற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் அஞ்சலி

TAMIL CNN  TAMIL CNN
ஆவணஞானி குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் மறைவிற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் அஞ்சலி

தற்போது உலகில் பல நாடுகளிலும் கிளைகளை அமைத்துதமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழ்க்கல்வி ஆகிய துறைகளில் உழைத்துவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாகத் திகழ்ந்தவரும் தமிழ்ப் பற்றாளரும் அவண ஞானி என்னும் சிறப்புப பட்டத்தினைப் பெற்றவருமான “குரும்பசிட்டி” இரா.கனகரத்தினம் அவர்கள் 22.06.2016 புதன்கிழமை இலங்கையின் கண்டி மாநகரில் காலமானார் என்னும் சோகச் செய்தியினுள் கலந்தது அவர் பணிதனை உற்றுப்பார்ப்பதனை உலகத் தமிழ்ப் பண்பாட்டுஇயக்கம் தனது கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறது1934ம் ஆண்டு ஆவணி 1ம்திகதி பிறந்த குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் தனது பதினெட்டாவது வயதில் தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் சேகரிக்கும் தனது பணியினை ஆரம்பித்து 2015ம் ஆண்டு அகதியாக தமிழகத்தில் திருச்சியில் வாழும்வரை ஓய்வு ஒழிச்சல் இன்றி தனது பணியினைத் தொடர்ந்து வந்தார்.

இவர் உலகத் தமிழர்களை ஒரு அமைப்பின் கீ்ழ்க் கொண்டுவந்து தமிழ் மொழியையும் பண்பாட்டினையும் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு இயக்கம் அமைக்க பல முயற்சிகளைச் செய்து அருட்தந்தை வண.தனிநாயகம் அடிகளார், ஏ.கே.செட்டியார், பேராசிரியர் அமரர் சு.வித்தியானந்தன் (ஈழம்), அமரர் பேராசிரியர் சாலை இளந்திரையன்l அமரர் பேராசிரியர் சாலினி இளந்திரையன் (தமிழகம்), அமரர்சோதிநாதன் (தென்ஆபிரிக்கா)l திருமதி காமாட்சி சோதிநாதன் (தென்ஆபிரிக்கா) மற்றும் உலகப் பேராளர்களை ஒன்றுதிரட்டி பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்கள் விருப்பப்படி பாதுகாப்பை பண்பாடு என மாற்றி உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் 01.08.1974ல் இலங்கை யாழ்ப்பாணத்தில் உருவானது.

திரு.இரா கனகரத்தினம் அவர்கள் தொடர்ந்தும் பல ஆண்டுகள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்காக உழைத்தார். 1974 மதல் 1981வரை செயலாளர் நாயகமாகப் பணியாற்றினார். 1977ல் முதலாவது மாநாட்டினைச் சென்னையிலும் 1980ல் இரண்டாவது மாநாட்டினை மொறீசியசிலும் நடாத்தினார்.

‘‘உலகத்தமிழர் குரல்” பத்திரிகையின் ஆசிரியரான இரா. கனகரத்தினம் அவர்கள் ‘‘ சீசரின் தியாகம்” சிறுகதை ”அலைகடலுக்கு அப்பால்” ”உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி” ”இறி யுனியன் தீவில் எங்கள் தமிழர்கள்” ”மொறீசியஸ் தீவில் எங்கள் தமிழர்கள்” ”ஒரு குடையின் கீழ் உலகத்தமிழினம்” ”ஒரு நுாற்றாண்டு 1890-2011 ” இலங்கைத்தமிழர் வரலாறு மைக்ரோ பில்ம்களில் (நுண்படச்சுருளில்) முதலான பல வரலாற்று நுால்களைத் தந்ததுடன் தான் பங்குபற்றிய உலகத் தமிழ் ஆராட்சி மாநாடுகளில் அவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் மொறீசியஸ பிரதமர் ராம்குலாம் தமிழக முதல்வர்களான எம்.ஐி.இராமச்சந்திரன் மு.கருணாநிதி போன்ற தலைவர்களால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அகில இலங்கை சமாதான நீதவான் திரு.இரா.கனகரத்தினம் அவர்கள் கண்டியில் உலகத் தமிழர் ஆவணக்காப்பகத்தினை நிறுவி தனது பணிதனைத் தொடர்ந்து செய்து வந்த காலத்தில் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப் பட்டு சிலகாலம் சிறையிலும் சிரமங்களை அனுபவித்திருந்தார்.

இவரது சேகரிப்புக்கள் கல்முனை கண்டி யாழ்ப்பாணம் கனடா நோர்வே போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 1996ல் கனடாவில் குரும்பசிட்டி நலன்பரி சபையினர் ”ஆவண ஞானி” எனும் பட்டமளித்து கௌரவித்திருந்தனர். தனது சேகரிப்புக்கள் நுண்படச் சுருள்களில் ஆவணமாக்கப்பட்டு அடத்த சந்ததிக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனும் தனது நீண்ட நாள் ஆசையை நோர்வே அரச நிறுவனம் ஒன்று நிறைவேற்றியதால் தனது சேகரிப்பான உலகத்தமிழர் தகவல்களும் ஒரு நுாற்றாண்டு இலங்கைத் தமிழர் வரலாறும் பாதுகாக்கப் பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார்.

தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.தமிழ்ச் செல்வன் அவர்களின் பரிந்துரையில் தமிழீழ ஆவணக்காப்பகத்தில் பணி புரிந்தபோது நேரடியாகத் தமிழீழத் தேசியத்தலைவரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

வரலாற்று நாயகன் ஆவண ஞானி குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம். இங்கே படத்தில் கடந்த ஆண்டு சென்னையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்திய கல்வி மாநாட்டில் அவருக்கு சிறப்புப் பட்டம் ஒன்றினத் துணைவேந்தர் பொன்ன வைக்கோ மற்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலர் துரைகணேசலிங்கம் அகியோர் வழங்குகின்றனர்இ வ்வாறு உலகத் தழிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் திரு.வி.சு.துரைராஜா செலாளர் நாயகம் திரு.துரைகணேசலிங்கம் அகில ஊடகத்துறைப் பொறுப்பாளர் திரு.லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மூலக்கதை