சிறந்த அணியிடமே தோற்றோம் - நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டி

மாலை மலர்  மாலை மலர்
சிறந்த அணியிடமே தோற்றோம்  நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டி

புதுடெல்லி, மார்ச். 31–

20 ஓவர் உலககோப்பையில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த அரை இறுதியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது.

முன்ரோ 32 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் 28 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பென்ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், டேவிட் வில்லி, ஜோர்டான், புளுன்கெட், மொய்ன் அலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடக்க வீரர் ஜேசன் ராய் 44 பந்தில் 78 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), பட்லர் 17 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சோதி 2 விக்கெட் எடுத்தார்.

இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் மார்கன் கூறியதாவது:–

முதல் 7 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இதனால் அந்த அணி 180 ரன்னுக்கு மேல் குவித்து விடும் என்று கருதினேன். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தை 153 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினார்கள்.

தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அணியை முன்னேறவிடவில்லை. வில்லியம்சன் விக்கெட் மிகவும் முக்கியமானதாகும்.

நாங்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி இருக்கிறோம். இறுதிப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துவோம். ஒவ்வொரு வீரரும் கடின உழைப்புக்காக பல்வேறு தியாகங்களை செய்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தோல்வி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் கூறியாவது:–

சிறந்த அணியிடமே நாங்கள் தோற்று இருக்கிறோம். இங்கிலாந்து அணியே அனைத்து பாராட்டுதலுக்குரியதாகும். 180 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தால் சரியான போட்டியை கொடுத்து இருப்போம். மிடில் ஆர்டர் வரிசை பேட்டிங் சிறப்பாக அமையவில்லை.

ஜேசன்ராய் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. ஆட்டம் முழுவதையும் தன்வசப்படுத்தி எங்களை வெளியேற்றிவிட்டார். எங்களது பவுலர்கள் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு ஆக்ரோஷமாக விளையாடினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. இதை அந்த அணி தக்கவைத்துக் கொள்ளவில்லை.

‘சூப்பர் 10’ சுற்றில் தோல்வியை சந்திக்காத நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் வீழ்ந்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

மூலக்கதை