ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

  தினத்தந்தி
ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், இரண்டாவது இடத்தை பிடிக்கும் இரு சிறந்த அணிகள் என 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இதில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சிலியையும் (வருகிற 28-ந் தேதி), 2-வது ஆட்டத்தில் ஓமனையும் (29-ந் தேதி), 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தையும் (டிச.3) எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சண்டிகாரை சேர்ந்த ரோகித் கேப்டனாக தொடருகிறார். தோள்பட்டை காயம் காரணமாக நட்சத்திர முன்கள வீரர் அரைஜீத் சிங் ஹூன்டால் ஒதுங்கி இருக்கிறார். இந்திய ஜூனியர் ஆக்கி அணி வருமாறு:- கோல்கீப்பர்கள்: பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங், பின்களம்: ரோகித், அமீர் அலி, அன்மோல் எக்கா, தலிம் பிரியோபார்தா, சுனில் பாலக்‌ஷப்பா பென்னுர், ஷர்தானந்த் திவாரி, நடுகளம்: அங்கித் பால், அத்ரோகித் எக்கா, தோனவ்ஜாம் இங்கலெம்பா லுவாங், மன்மீத் சிங், ரோசன் குஜூர், குர்ஜோத் சிங், முன்களம்: சவுரவ் ஆனந்த் குஷ்வாஹா, அர்ஷ்தீப் சிங், அஜீத் யாதவ், தில்ராஜ் சிங். அணி அறிவிப்புக்கு பிறகு பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், ‘நாங்கள் ஒரு சிறந்த அணியை தேர்த்தெடுத்துள்ளோம். பெரும்பாலான வீரர்கள் இந்த மாதிரியான பெரிய போட்டியில் சிறப்பாக செயல்பட என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவர்கள். உடல் ரீதியான பலம், திறமை, ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவை அணி தேர்வுக்குரிய தகுதியில் ஒன்றாக இருந்தாலும், நெருக்கடியான தருணத்தில் மனரீதியாக எப்படி வலுவாக செயல்படுகிறார்கள் என்பதை முக்கியமாக பார்த்தோம். உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக நாங்கள் நிறைய சர்வதேச போட்டிகளில் ஆடினோம். பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் எங்களுடன் தங்கி இருந்த இந்திய சீனியர் அணியினருடன் பலமுறை மோதினோம். சீனியர் வீரர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படும்போது தானாகவே நம்பிக்கையை பெறுவார்கள். ஒட்டுமொத்தத்தில் நாங்கள் உற்சாகமான அணியாக உள்ளோம். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்றார். ரோகித் தலைமையிலான இந்திய ஆக்கி அணி முதல் அணியாக இன்று மாலை சென்னை வந்தடைகிறது.

மூலக்கதை