வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி

டாக்கா, வங்காளதேச நாட்டில் காக்ராசாரி என்ற இடத்தில் வசித்து வரும் மர்மா என்ற பழங்குடியின சமூகத்தின் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கூட மாணவியான அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு மர்மா மற்றும் மோக் சமூக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் காக்ராசாரி பகுதியில் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், பல்வேறு சாலைகளிலும் போராட்டம் எதிரொலியாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. வங்காளதேச ராணுவமும் குவிக்கப்பட்டது. இந்நிலையில், ராணுவ வீரர்களை நோக்கி போராட்டக்காரர்கள் சிலர் கற்களை வீசி தாக்கினர் என கூறப்படுகிறது. இதில் 3 வீரர்கள் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். எனினும், வங்காளதேச ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், கற்களை வீசி தூண்டி விடுவது போன்று நடந்து கொண்டபோதும், கட்டுப்பாட்டுடனும், பொறுமையுடனும் படையை பயன்படுத்துவதில் இருந்து விலகியுமே இருந்தோம் என்று தெரிவிக்கின்றது.
மூலக்கதை
