பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா...முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது

  தினத்தந்தி
பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா...முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது

கொல்கத்தா, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் - எய்டன் மார்க்ரம் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்க்ரம் தனது முதல் ரன்னை எடுக்க 23 பந்துகள் எடுத்து கொண்டார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரிக்கல்டன் 23 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து முல்டர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மார்க்ரமையும் (31 ரன்கள்) பும்ரா காலி செய்தார். அடுத்து வந்த பவுமா (3 ரன்), குல்தீப் சுழலில் சிக்கினார். பின்னர் டோனி டி சோர்ஜி களமிறங்கினார். அவர் 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த கைல் வராயன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . மார்கோ ஜான்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார் .மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் . இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடி வருகிறது.

மூலக்கதை