ஐ.பி.எல்: லக்னோ அணியில் இணைந்த ஷமி..? எக்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

  தினத்தந்தி
ஐ.பி.எல்: லக்னோ அணியில் இணைந்த ஷமி..? எக்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

லக்னோ, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக லக்னோ அணியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்ற ஒரு போட்டியில் முகமது ஷமி பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிளீன் போல்டு ஆவார். அந்த சம்பவத்தில் முகமது ஷமியை பற்றி குறிப்பிடாமல் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகும் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்துள்ளது. அத்துடன் அந்த பதிவிற்கு‘காரணமே இல்லாமல் இந்த தருணத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன்’ என்று தலைப்பிட்டுள்ளது. இதனால் முகமது ஷமி லக்னோ அணியில் இணைந்து விட்டாரா? இல்லையா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.Just thinking about this Ekana moment for no reason pic.twitter.com/qxn8XNl2Eiஇந்த வருட ஐ.பி.எல். தொடரில் ரூ.10 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஐதராபாத் அணியால் வாங்க்கப்பட்ட முகமது ஷமி 9 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதே அதே தொகைக்கே லக்னோ அணியும் அவரை வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

மூலக்கதை