2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

  தினத்தந்தி
2வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

பைசலாபாத், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது .இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. சல்மான் ஆகா 69 ரன்னும், முகமது நவாஸ் 59 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 53 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா 40.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 270 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. தனது 22-வது சதத்தை நிறைவு செய்த குயின்டான் டி காக் 123 ரன்களுடன் (119 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.

மூலக்கதை