என் கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கின்றேன் - சுருதி பிரியா பரபரப்பு அறிக்கை

  தினத்தந்தி
என் கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கின்றேன்  சுருதி பிரியா பரபரப்பு அறிக்கை

சென்னை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக புகார் கூறியிருந்த, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து ‘அது என்னுடைய குழந்தை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்' என்று ரங்கராஜ் கூறியிருந்தார். ‘அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரவேண்டும்’ என்று ஜாய் கிரிசில்டாவும் அழைப்பு விடுத்தார். பரபரப்பான இந்த சூழலில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியும், வக்கீலுமான சுருதி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- "நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டபோது, ஜாய் கிரிசில்டாவிடம் இருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளைப் பெற்றேன். ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், 'ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும்', ‘வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும்', 'மாதம் ரூ.8 லட்சம் வழங்க வேண்டும்', ‘இப்போது எனக்கு ரூ.10 லட்சம் வேண்டும்', 'ரங்கராஜ் தனது மனைவி சுருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வரிகளே ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம், பணம் பறிப்பது மற்றும் எங்கள் குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது என்பதை தெளிவாக காட்டுகின்றன. நான் என் கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கின்றேன். அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்." இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மூலக்கதை