வெற்றிக்காக கடைசிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ்... நியூசிலாந்து திரில் வெற்றி

  தினத்தந்தி
வெற்றிக்காக கடைசிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ்... நியூசிலாந்து திரில் வெற்றி

ஆக்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று 2-வது டி20 ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க் சேப்மேன் 78 ரன்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சேஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த ஒரு கட்டத்தில் 94-6 என மோசமான நிலையில் இருந்தது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டும் இருந்த நிலையில், 42 பந்துகளுக்கு 114 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. எனவே நியூசிலாந்து அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோவ்மேன் பவலும் ரோமாரியோ சைப்பர்டும் நம்பிக்கை இழக்காமல் அதிரடி காட்டினர். இருவரின் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பவல் 16 பந்துகளில் 45 ரன்னிலும், சைபர்ட் 16 பந்துகளில் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும், மேத்தீவ் போர்டீ அணியில் வெற்றிக்காக கடைசிவரை போராடினார். ஆனால் அவரால் அணியை வெற்றி இலக்கு அருகில் மட்டுமே கொண்டு வர முடிந்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் சோதி, சாண்ட்னர் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 3-வது டி20 போட்டி வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.

மூலக்கதை