சிக்சர் அடித்தால் இனி.. அந்த விதியை மாற்ற வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

  தினத்தந்தி
சிக்சர் அடித்தால் இனி.. அந்த விதியை மாற்ற வேண்டும்  இந்திய முன்னாள் வீரர்

மும்பை, நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக வெள்ளைப்பந்து (டி20, ஒருநாள்) போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்கவிட்டு வருகின்றனர். இதனால் போட்டிகளில் ரன் குவிப்பு அதிகமாகி வருகிறது. முன்பெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் அடிப்பதெல்லாம் கடினமாக தெரியும். ஆனால் தற்போதுள்ள புதிய விதிகளினால் 300+ ரன்கள் எளிதாக அடிக்கப்படுகின்றன. மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் சர்வ சாதரணமாக 200+ ரன்கள் அடிக்கப்படுகின்றன. இதனிடையே கிரிக்கெட்டில் மேலும் பொழுதுபோக்கை அதிகரிக்க 100 மீட்டருக்கு மேல் அடிக்கப்படும் சிக்சர்களுக்கு 6 ரன்களுக்கு பதிலாக 12 ரன்கள் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கூறியிருந்தார். இது பரவலாக பேசப்பட்டது. அந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரின் 3-வது போட்டியில் டிம் டேவிட் அடித்த சிக்சர் ஒன்று 129மீ தூரம் பறந்தது. இந்நிலையில் 100 மீட்டருக்கு மேல் அடிக்கப்படும் சிக்சர்களுக்கு 8-10 ரன்கள் கொடுக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிரிக்கெட்டில் பல விதிகள் மாற்றப்பட்டது வருவது போல் இதனையும் வரும் காலங்களில் மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “டிம் டேவிட், அக்சர் படேல் பந்துவீச்சில் 129 மீட்டர் அளவில் சிக்சர் அடித்தார். இதில்தான் கெவின் பீட்டர்சன் விதிமுறையை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார். ஒரு பேட்ஸ்மேன் 100 மீட்டருக்கு மேல் சிக்சர் அடித்தால், அவருக்கு 8 அல்லது 10 ரன்கள் கொடுக்க வேண்டும் என்று நான் கூட சொல்லி வருகிறேன். இந்த மாற்றம் மிகவும் முக்கியமானது. கிரிக்கெட்டில் விதிகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன.பவர் பிளேவில் விதிகள் மாறி இருக்கின்றது. சிவப்பு பந்து, வெள்ளை பந்து, புது பந்து என அனைத்திலும் விதிகள் மாறி இருக்கிறது. ஏன் ஒருநாள் கிரிக்கெட் கூட 60 ஓவர்களில் இருந்து 50 ஓவராக மாற்றப்பட்டது. அதன் பின்பு டி20 கிரிக்கெட் வந்திருக்கிறது. தற்போது பத்து ஓவர் கிரிக்கெட் கூட விளையாடி இருக்கிறேன். எனவே கிரிக்கெட்டில் புதிய விதிகளை நாம் வகுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் 100 மீட்டருக்கு மேல் அடிக்கப்படும் சிக்சருக்கு 8 அல்லது 10 ரன்கள் கொடுக்க வேண்டும். இந்த மாற்றம் இப்போது அல்லது எதிர்காலத்தில் நடக்கும். அது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ, அவ்வளவு சிறந்தது. இது நிச்சயமாக டி20களில் நடக்க வேண்டும். அது நிகழும்போது, ​​பவர்-ஹிட்டர்களின் மதிப்பு இன்னும் அதிகரிக்கும்” என்று கூறினார்.

மூலக்கதை