உலகக்கோப்பை வெற்றி: இந்திய மகளிர் அணிக்கு ஜாக்பாட் - டாடா நிறுவனம் அறிவிப்பு

  தினத்தந்தி
உலகக்கோப்பை வெற்றி: இந்திய மகளிர் அணிக்கு ஜாக்பாட்  டாடா நிறுவனம் அறிவிப்பு

மும்பை, 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும். கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐ.சி.சி. சார்பில் ரூ. 39.78 கோடியும், பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக அமைந்துள்ளது. அதுபோல அணியின் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில முதல் - மந்திரிகள், கிரிக்கெட் வாரியங்களும் பரிசுத்தொகைகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகின்றன. அந்த வரிசையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதன் வரவிருக்கும் டாடா சியரா எஸ்யூவி- காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மாடல் கார் நவம்பர் 25-ம் தேதிதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை