நாட்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் வீழ்ச்சி: உலக தங்க கவுன்சில் தகவல்

  தினத்தந்தி
நாட்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் வீழ்ச்சி: உலக தங்க கவுன்சில் தகவல்

புதுடெல்லி,இந்தியாவில் இந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டதால் நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் மந்தமானது. அதன் தரவுகளின்படி, 2-ம் காலாண்டில் தங்கத்தின் மொத்த தேவை கடந்தாண்டின் 248.3 டன்னிலிருந்து 209.4 டன்களுக்கு குறைந்தது. இது 16 சதவீதம் குறைவாகும். ஆனால், விலை அடிப்படையில் தேவையின் மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து ரூ.2,03,240 கோடியாக உயர்ந்தது (கடந்த ஆண்டு ரூ.1,65,380 கோடி). உலகின் 2-வது பெரிய தங்க நுகர்வோர் சந்தையாக உள்ள இந்தியாவில் தங்க நகை தேவை 31 சதவீதம் குறைந்து 171.6 டன்னிலிருந்து 117.7 டன்களாக வீழ்ந்தது. எனினும், நகை வாங்குதலின் மதிப்பு சுமார் ரூ.1,14,270 கோடியில் நிலைத்திருந்தது. ஏனென்றால் வாங்குபவர்கள் உயர்ந்த விலைக்கு வாங்கவும் தங்களை தயார்படுத்தி கொண்டனர். மாறாக, தங்கத்தின் முதலீட்டு தேவை வலுவாக இருந்துள்ளது. தங்கத்தின் மீதான முதலீடு 20 சதவீதம் அதிகரித்து 91.6 டன்களாகவும், மதிப்பில் 74 சதவீதம் உயர்ந்து ரூ.51,080 கோடியில் இருந்து ரூ.88,970 கோடியாகவும் உயர்ந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்தது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் முதலீட்டு வாங்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க இறக்குமதி 37 சதவீதம் குறைந்து 308.2 டனிலிருந்து 194.6 டன்களாகவும், மறுசுழற்சி 7 சதவீதம் குறைந்து 21.8 டன்களாகவும் சரிந்தது. மொத்தமாக, 2025-இல் தங்க தேவையை 600-700 டன் என மதிப்பிடப்படுகிறது. முதல் 9 மாதங்களில் தேவை 462.4 டனாக இருந்தது. உலகளவில் இதற்கு எதிராக, 2-ம் காலாண்டில் தங்க தேவை 1,313 டனாக உயர்ந்தது. இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த அளவாகும்.

மூலக்கதை