மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ள தமிழ் முன்னணி நடிகை

  தினத்தந்தி
மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ள தமிழ் முன்னணி நடிகை

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்' என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து முன்புபோல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தொடர்ந்து பிட்னஸிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் மட்டுமின்றி விளம்பர வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. சமந்தா இப்போது மும்பையிலேயே அதிகம் காணப்படுகிறார். இந்த நிலையில் மும்பையில் சமந்தா வீடு வாங்கியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ‘புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஒரு வீட்டின் வாசல் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள், அவர் புதிதாக வீடு வாங்கியிருப்பதாக கூறி வருகின்றனர்.

மூலக்கதை