ரசிகர்கள் சண்டை: சினிமாவை கொல்லாதீர்கள் - நடிகர் பவன் கல்யாண்

  தினத்தந்தி
ரசிகர்கள் சண்டை: சினிமாவை கொல்லாதீர்கள்  நடிகர் பவன் கல்யாண்

‘ஓஜி’ படத்தின் பெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண். மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண். மேலும், பவன் கல்யாண் பேசும்போது, “ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பலர் தங்களது குடும்பங்களை விட்டுப் பிரிந்து பணிபுரிந்து வருகிறார்கள். இயக்குநர் சுஜித் தனது மனைவியையும் குழந்தையையும் ஒன்றரை மாதமாகப் பார்க்கவில்லை. ஆனால், அனைவரும் படும் கஷ்டங்களை அறியாமல் ரசிகர்கள் இணையத்தில் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை நிறுத்துமாறும் எனது ரசிகர்களையும், மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திரைப்படங்கள் ஓடி 100 நாட்கள் கொண்டாடிய நாட்கள் எல்லாம் இருந்தன. ஆனால், இப்போது ஒரு படத்தின் ஆயுட்காலம் 6 நாட்கள் மட்டுமே. ஆகையால் தயவுசெய்து சினிமாவை கொல்லாதீர்கள். ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள்” என்று பேசினார். இந்தப் பேச்சு இணையத்தில் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் ‘ஓஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் உலகளவில் ரூ. 266 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை