மீண்டும் திருமணத்துக்கு தயாராகும் டாம் குரூஸ்

உலக அளவில் திரை பிரபலமாக இருப்பவர், டாம் குரூஸ். பல கோடி ரசிகர்களை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கிறார். டாம் குரூஸை பார்ப்பவர்கள் `இவருக்கு மட்டும் எப்படி வயதே ஆகாமல் இருக்கிறது..?’ என்று ஆச்சரியத்துடன் கேட்பதுண்டு. அந்த அளவுக்கு இளமையாக காட்சி தரும் இவரின் வயது 63. இந்த வயதிலும் தான் நடிக்கும் படங்களுக்கு டூப் போடுவதில்லை. எவ்வளவு ஆபத்தான காட்சியானாலும் அசாதாரணமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெறுவது இவரது வழக்கம். இவருக்குள் மீண்டும் காதல் அரும்பியிருக்கிறது. அந்த காதல் தேவதை ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் கியூபா நாட்டை சேர்ந்த நடிகை அனா டி அர்மாஸ். அவருக்கு வயது 37. இதுவரை பல ஹாலிவுட் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் அவ்வப்போது பொது இடங்களில் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஜோடி இன்னும் திருமண நிச்சயதார்த்தம் செய்யவில்லை. இருப்பினும் திருமணம் தொடர்பான திட்டங்கள் வகுத்து வருவதாகவும், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. சாகசத்தை விரும்பும் இந்த ஜோடி, தங்கள் திருமணத்தை தனித்துவமாக்க விண்வெளியை தேர்வு செய்திருப்பதாகவும் தகவல்கள் உலவுகின்றன. அதற்கேற்ப விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் முதல் ஜோடி என்ற பெருமையை பெற டாம் குரூஸ் ஆர்வமாக உள்ளார். விண்வெளிக்குச் சென்று திருமணம் செய்து கொண்டால் அது தங்களுக்கு மறக்க முடியாத நிகழ்வுகளுள் ஒன்றாக இருக்கும் என்று இருவரும் விரும்புகிறார்கள். அவர்களின் பட்டியலில் நீருக்கடியில் அல்லது ஸ்கை டைவிங் உள்ளிட்ட பிற சாகச விருப்பங்களும் அடங்கும். மிமி ரோஜர், நிக்கோல் கிட்மேன், கேட்டி ஹோம்ஸ் ஆகியோருடன் டாம் குரூசுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. இப்போது நடக்க இருப்பது 4-வது திருமணம்.
மூலக்கதை
