இசை ஆல்பத்தில் பேரனுடன் இணைந்து பாடிய இளையராஜா

  தினத்தந்தி
இசை ஆல்பத்தில் பேரனுடன் இணைந்து பாடிய இளையராஜா

இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் சினிமா இசையமைப்பாளராக தீவிரமாக இயங்கிவருகிறார். அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் மாபெரும் ரசிகர் படையைக் கொண்ட இசையமைப்பாளராக திகழ்கிறார். இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா மேற்கத்திய இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்று, இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடும் இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா முதல் பாடலாக பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து திருவண்ணாமலையில் வெளியிட்டார். லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக இருந்த பி.கே.கார்த்திக், ‘போர போக்குல' என்ற இசை ஆல்பத்தை இயக்கி இருக்கிறார். இதில் நடிகர் ரகுவரனின் தம்பி மகன் ரித்திஷ், ‘பைட் கிளப்' படத்தில் நடித்த மோனிஷா ஆகியோர் நடித்துள்ளனர். விஷ்ணு எடவன் எழுத்தில் உருவான இந்த இசை ஆல்பத்துக்கு முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இரு பதிப்புகளாக உருவாகி இருக்கும் இந்த இசை ஆல்பத்தில், இளையராஜாவுடன் இணைந்து யத்தீஸ்வர் ராஜாவும் பாடல் பாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. ‘போர போக்குல’ இசை ஆல்பத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வெளியிட்டு குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏற்கனவே இளையராஜா குடும்பத்தில் இருந்து கங்கை அமரன், கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி ஆகியோர் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகி இருக்கும் நிலையில் தற்போது புது வரவாக வந்திருக்கும் யத்தீஸ்வர் ராஜாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.https://t.co/2aXTFiciGHMy version of Pora Pokkula is out on YouTube now! pic.twitter.com/bKG5PTG81O

மூலக்கதை