தங்கத்துக்கு போட்டியாக ஜெட் வேகத்தில் எகிறும் வெள்ளி விலை.. உயர்வுக்கு காரணம் என்ன..?

சென்னை, இந்தியாவின் மிக முக்கியமான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை அதிகரித்துள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு இதுவரை தங்கம் விலை 47 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது, வெள்ளி விலை 52 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டுள்ளது. இதன்படி தங்கம் விலை ஒரு புறம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு செல்லும் அதே நேரத்தில், மறுபுறம் வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. கடந்த ஆண்டின் (2024) இறுதியில் ஒரு கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ ரூ.99 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. அதனைத்தொடர்ந்து நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி, இந்த இடைபட்ட காலங்களில் மட்டும் கிராமுக்கு ரூ.66-ம், கிலோவுக்கு ரூ.66 ஆயிரமும் அதிகரித்திருக்கிறது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளி விலை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் கிராமுக்கு ரூ.29-ம், கிலோவுக்கு ரூ.29 ஆயிரமும் உயர்ந்துள்ளது. உயர்வுக்கு காரணம் என்ன? இந்த விலையேற்றம் இதோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. இனிவரும் நாட்களிலும் அதன் விலை நிச்சயம் ஏறுமுகத்தில்தான் இருக்கும் என வியாபாரிகள் அடித்து சொல்கிறார்கள். தங்கம் விலை உயர்வு என்பது பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஆனால் வெள்ளி விலை உயர்வுக்கு அப்படி என்னதான் காரணம்? என்பது பலருடைய எண்ண ஓட்டமாக இருக்கிறது. தங்கத்தை போலவே, வெள்ளியும் ஒரு உலோகம்தான். ஆனாலும் தங்கத்தின் மதிப்பைவிட குறைவுதான். இருந்தபோதிலும், வெள்ளியின் பயன்பாடுகள் பல்வேறு துறைகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. மின்னனு சாதனங்கள், விமான உற்பத்தி பாகங்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின்சார உற்பத்தி, மின் கடத்திகள் போன்ற பல பயன்பாடுகளுக்கு முக்கிய அச்சாரமாக உள்ளது. இந்த பயன்பாட்டுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதை கவனித்த உலக முதலீட்டாளர்களின் கவனம், தங்கத்தில் இருந்து வெள்ளியின் பக்கம் அதிகம் திரும்பியிருக்கிறது. அதிகளவில் வெள்ளியை வாங்கி கையிருப்பு வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெருமுதலீட்டாளர்கள் மட்டுமல்ல, சிறு முதலீட்டாளர்களும் வெள்ளியில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். தங்கத்தை காட்டிலும், வெள்ளியில் லாபம் அதிகம் என்பதாலும் முதலீட்டாளர்கள் அதன் பக்கம் சாயத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாகவே அதன் விலை உயர்ந்து வருகிறது என வியாபாரிகளும், பொருளாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
மூலக்கதை
