பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

கொழும்பு, 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. அந்த வெற்றி உத்வேகத்தை தொடரும் ஆர்வத்துடன் உள்ளது. கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் கணிசமாக பங்காற்றினர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட மிடில் வரிசை வீராங்கனைகள் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தனர். எனவே மிடில் வரிசை பேட்டர்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீசரனி உள்பட அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாத்தில் வங்காளதேசத்திடம் எளிதில் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 129 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான் தவறுகளை களைந்து சரிவில் இருந்து மீண்டு வர முயற்சிக்கும். இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றாலே எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். சமீபத்தில் அமீரகத்தில் நடந்த ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 3 முறை சந்தித்த இந்தியா, பாகிஸ்தான் அணியினர் கைலுக்குவதை தவிர்த்ததுடன், சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் மந்திரியுமான மொசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ள இந்திய அணி மறுத்து விட்டது. இந்த பிரச்சினை இன்னும் அடங்காத நிலையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் பரஸ்பரம் கைகொடுத்து கொள்வார்களா என்பது கேள்விக்குறி தான். அந்த வகையிலும் இந்த போட்டி கவனத்தை ஈர்க்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை சர்வதேச ஒருநாள் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்று இருக்கிறது. எனவே வலுவான இந்தியாவின் சவாலை சமாளிப்பது பாகிஸ்தானுக்கு எளிதான காரியமாக இருக்காது. கொழும்பில் இன்று மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி. பாகிஸ்தான்: முனீபா அலி, ஒமைமா சோகைல், சித்ரா அமின், அலியா ரியாஸ், நடாலியா பெர்வைஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ், நஷ்ரா சந்து, சாடியா இக்பால். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
மூலக்கதை
