உலக பாரா தடகளம்: இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்

புதுடெல்லி, மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான எப்.51 பிரிவு உருளை தடி எறிதலில் (கிளப் துரோ) நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனை எக்தா பயான் 19.80 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு இந்திய வீராங்கனை காஷிஷ் லக்ரா 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உக்ரைனின் ஜோயா ஓவ்சி (24.03 மீட்டர்) தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். நீளம் தாண்டுதலில் (டி47 பிரிவு) இந்திய வீராங்கனை சக்குங்கல்பரம்பில் 5.74 மீட்டர் தாண்டி புதிய ஆசிய சாதனையை படைத்தார். இருப்பினும் அவரால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆண்களுக்கான குண்டு எறிதலில் (எப்57 பிரிவு) இந்தியாவின் சோமன் ராணா 14.69 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். உயரம் தாண்டுதலில் (டி64 பிரிவு) பாரீஸ் பாராஒலிம்பிக் சாம்பியனான பிரவீன் குமார் 2 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். உஸ்பெகிஸ்தானின் டெமுர்பெக் ஜியாசோவ் 2.03 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். நேற்றைய பந்தயங்கள் முடிவில் பதக்கப்பட்டியலில் பிரேசில் 12 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் முதலிடத்தல் நீடிக்கிறது. இந்தியா 6 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மூலக்கதை
