செப்டம்பரில் ரூ.1.89 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்; 9.1% வருடாந்திர அதிகரிப்பு

புதுடெல்லி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9.1% அதிகரித்து உள்ளது. இதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.89 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. கடந்த ஆகஸ்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக இருந்தது. இது, அதற்கு முந்தின ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் (2024-ம் ஆண்டு) ஒப்பிடும்போது 6.5 சதவீதம் (ரூ.1.75 லட்சம் கோடி) அதிகம் ஆகும். இதேபோன்று, ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான மாதங்களில் ரூ.10.04 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில், இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஜி.எஸ்.டி. வசூல், 9.9 சதவீதம் (ரூ.9.13 லட்சம் கோடி) அதிகம் ஆகும். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்ட முடிவின்படி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் சமீபத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி முதல் புதிய ஜி.எஸ்.டி. முறை நடைமுறைக்கு வந்தது. 4 அடுக்கு வரி விதிப்பு, இரண்டடுக்கு வரி முறையாக குறைக்கப்பட்டது. இதனால், 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்கள் முடிவுக்கு வந்தன. 5 மற்றும் 18 சதவீத வரி விகிதங்களே இனி நடைமுறையில் இருக்கும். நுகர்வோரின் பொருட்கள் வாங்கும் திறனை அதிகரிப்பது மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கான நோக்கத்தில் வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக, பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.
மூலக்கதை
