"குற்றம் தவிர்" திரைப்பட விமர்சனம்

  தினத்தந்தி
குற்றம் தவிர் திரைப்பட விமர்சனம்

சென்னை, ரிஷி ரித்விக்கை நன்றாக படிக்க வைத்து போலீஸ் அதிகாரியாக்குவதுதான் அவரது அக்கா வினோதினியின் ஆசை. ரிஷி ரித்விக்கும் அதற்காக கடினமாக உழைத்து வருகிறார். இதற்கிடையில் தவறான அறுவை சிகிச்சையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்ட வினோதினியின் உயிர் பறிபோகிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதும், அதிகார வர்க்கம் மறைந்திருப்பதும் ரிஷி ரித்விக்குக்கு தெரியவருகிறது. இதையடுத்து தனது அக்காவின் மரணத்துக்கு பின்னணியில் இருக்கும் மருத்துவ மாபியாக்களை களையெடுக்க முடிவு செய்கிறார். ரிஷி ரித்விக் நினைத்தது நடந்ததா? அக்காவின் ஆசையை அவர் நிறைவேற்றினாரா? என்பதே பரபரப்பான மீதி கதை. போலீஸ் அதிகாரியாக துடிக்கும் இளைஞர் கதாபாத்திரத்தில் ரிஷி ரித்விக் பொருந்துகிறார். அக்காவின் மரணத்துக்கு காரணமானவர்களை எதிர்த்து போராடும் காட்சிகளில் உணர்ச்சிகளை தெறிக்க விட்டுள்ளார். நடிப்பு தாண்டி, நடனத்திலும் சில 'அசைவு'களை காட்டி கவருகிறார், ஆராத்யா. ‘எமோஷனல்' காட்சிகளில் கவனம் தேவை. வினோதினி வைத்தியநாதனின் அனுபவ நடிப்பு கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. வில்லனாக நடித்திருக்கும் சரவணன், அவரது உதவியாளராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன், டாக்டராக வரும் ஆனந்த் பாபு, சாய் தீனா, காமராஜ், சென்ட்ராயன் என அனைவருமே பொருத்தமான தேர்வு. ரோவின் பாஸ்கரின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவா இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. பரபரப்பான கதைக்களம் பலம். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் இவ்வளவு ‘பில்டப்' கூடாது. படத்தின் வேகத்துக்கு இடையூறாக வரும் அந்த தாலாட்டு பாடல் தேவையா? நீளமான காட்சிகளையும் குறைத்திருக்கலாம். மருத்துவத்துறையில் நடக்கும் மோசடிகளை வெளிப்படுத்தும் அதேவேளை, கமர்ஷியல் களமாகவும் கதையை வழங்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் கஜேந்திரன். குற்றம் தவிர் - சில காட்சிகளையும் தான்.

மூலக்கதை