இந்த முறை கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - ஹர்மன்பிரீத் கவுர்

கவுகாத்தி, மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை (தவிர்க்க முடியாத காரணத்தால் சில தடவை தாமதம் ஆகியிருக்கிறது) நடத்தப்படுகிறது. இதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நேற்று நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த முறை கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உள்ளூரில் போட்டி நடப்பதால் இவ்வாறு சொல்லவில்லை. நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறோம். சமீபத்திய போட்டிகளின் முடிவுகள் நாங்கள் எந்தஅளவுக்கு வலுவாக இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளோம். அதனால் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக சொல்கிறேன். ஆனால் இப்போது எங்களது முழு கவனமும் நாளைய (இன்று) முதல் ஆட்டத்தை நன்றாக தொடங்குவதிலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
