ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் அரைசதமடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பர்கான் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சைம் அயூப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். பகார் ஜமானும் 46 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 114-2 என வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
மூலக்கதை
