ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 'சாம்பியன்'

  தினத்தந்தி
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் அரைசதமடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பர்கான் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சைம் அயூப் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பகார் ஜமானும் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 114-2 என வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் வெறும் 12 ரன்களில் அவுட்டானார்.தொடர்ந்து வந்த திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களில் சஞ்சு சாம்சன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். அவருக்கு சிவம் துபே பக்கபலமாக இருந்து 33 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த திலக் வர்மா 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மூலக்கதை