இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு - அதிகாரபூர்வ அறிவிப்பு

  தினத்தந்தி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு  அதிகாரபூர்வ அறிவிப்பு

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், புதிய நிர்வாக பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வானார். இதுவரை தலைவராக இருந்த ரோஜர் பின்னிக்கு 70 வயது கடந்து விட்டதால், கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி 70 வயதை கடந்தவர்கள் நிர்வாக பொறுப்பில் நீடிக்க முடியாது என்பதால் கடந்த மாதம் அவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கினார். அதைத் தொடந்து இப்போது பி.சி.சி.ஐ.யின் 37-வது தலைவராக மிதுன் மன்ஹாஸ் அரியணையில் ஏறுகிறார். 45 வயதான மிதுன் மன்ஹாஸ் சர்வதேச போட்டியில் ஆடியதில்லை. ஆனால் முதல்தர கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக மொத்தம் 18 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவர் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த போது தான், விராட் கோலி முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். முதல்தர போட்டியில் 157 ஆட்டங்களில் விளையாடி 27 சதம், 49 அரைசதம் உள்பட 9,714 ரன்களும், ‘லிஸ்ட் ஏ’ என்படும் உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் 130 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 4,126 ரன்களும் குவித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே, டெல்லி அணிக்காக ஆடியுள்ள அவர், பஞ்சாப், பெங்களூரு, குஜராத் அணிகளின் பேட்டிங் ஆலோசகராவும் பணியாற்றி இருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிர்வாகியாகவும் இருந்துள்ளார். துணைத்தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராக தேவஜித் சைக்யா நீடிக்கிறார்கள். இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கர்நாடகாவைச் சேர்ந்த ரகுராம் பாத் பொருளாளராகவும், இணைச் செயலாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் இணைகிறார்கள். இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினர்களாக எஸ்.சரத், சுப்ரதோ பானர்ஜி ஆகியோரது இடத்திற்கு முன்னாள் பவுலர்களான அனுபவம் வாய்ந்த பிரக்யான் ஓஜா, ஆர்.பி.சிங் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரின் கீழ் செயல்படுவார்கள். அகர்கரின் பதவி காலம் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வரை உள்ளது.

மூலக்கதை