புரோ கபடி 3-வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்

  தினத்தந்தி
புரோ கபடி 3வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, 12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. முதல் கட்ட ஆட்டங்கள் விசாகப்பட்டினத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்தன. இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு அடுத்த சுற்று போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி வரை இங்கு மொத்தம் 24 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதையொட்டி புரோ கபடி லீக் தலைவர் அனுபம் கோஸ்வாமி நேற்று நிருபர்களிடம் கூறுகையில் ‘2 ஆண்டுக்கு பிறகு புரோ கபடி லீக் மீண்டும் சென்னையில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு எப்போதுமே இந்தியாவின் மிக சிறந்த கபடி மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த சீசன் மிக சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த சீசனை விட அதிக ‘சூப்பர் 10’ ரைடுகளை பார்க்க முடிகிறது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கும், 8-வது இடம் வகிக்கும் அணிக்கும் இடையே வெறும் 6 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இந்த விறுவிறுப்பான கபடி தொடரை சென்னை ரசிகர்களுடன் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றார். இதுவரை 52 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. புள்ளிபட்டியலில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பால்டன் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் உ.பி. யோத்தாஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. உள்ளூரில் தமிழ் தலைவாஸ் அணிக்குரிய முதல் ஆட்டம் 1-ந்தேதி (யு மும்பைவுடன் மோதல்) நடக்கிறது. போட்டிக்கான டிக்கெட்டுகளை District by Zomato என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற்றுகொள்ளலாம். ரூ.150, ரூ.250, ரூ.1,000, ரூ.1,250, 2,000 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மூலக்கதை