ஹாரிஸ் ரவூப் செயலுக்கு பதிலடி கொடுத்த பும்ரா

  தினத்தந்தி
ஹாரிஸ் ரவூப் செயலுக்கு பதிலடி கொடுத்த பும்ரா

துபாய், ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த மோதலில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுப் (6 ரன்), இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அவர் அவுட் ஆனதும், விமானத்தை வீழ்த்தியது போல் பும்ரா லேசாக சைகை காட்டினார். இந்தியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஹாரிஸ் ரவுப் ரசிகர்களை நோக்கி 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது போல் சைகை காட்டி சர்ச்சையில் சிக்கினார். பிறகு அவருக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. பும்ராவின் செயல் அந்த சம்பவத்தை நினைவூட்டியது. பஹல்காம் கொடூர தாக்குதல் எதிரொலியாக இந்திய வீரர்கள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தனர். அது நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. மேலும் ‘டாஸ்’ போடும் போது வர்ணனையாளர் இரு அணி வீரர்களிடமும் ‘டாஸ் முடிவு’ குறித்து பேட்டி காண்பது வழக்கம். ஆனால் வர்ணனையாளர் இந்தியாவின் ரவி சாஸ்திரி தங்களிடம் பேசுவதை விரும்பவில்லை என பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இறுதி ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக ‘டாஸ்’ நிகழ்ச்சியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் ரவிசாஸ்திரியும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிசும் பேசினர்.

மூலக்கதை