கட்டுக்கடங்காமல் செல்லும் தங்கம் விலை.. தொடர்ந்து உயர்வதற்கான காரணம் என்ன?

  தினத்தந்தி
கட்டுக்கடங்காமல் செல்லும் தங்கம் விலை.. தொடர்ந்து உயர்வதற்கான காரணம் என்ன?

சென்னை, தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்ற நிலையை கடந்தது. அதன் பின்னரும் தங்கம் விலைக்கு ஓய்வு என்பதே இல்லாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தையும், கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தையும், நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்தையும் தாண்டியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்தபடியே பயணித்த தங்கம் விலையில் நேற்று அதிரடி உயர்வு இருந்தது. நேற்று முன்தினத்தை போலவே, நேற்றும் தங்கம் விலை காலை மற்றும் மாலையில் விலை மாற்றம் கண்டது. காலையில் சவரனுக்கு ரூ.560-ம், மாலையில் சவரனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 430-க்கும், ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையான தங்கம், நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. கடந்த 5-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 18 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.775-ம், சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 200-ம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.தங்கம் விலைஇந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெள்ளி விலைதங்கத்தைவிட வெள்ளி விலையின் வேகமும் கட்டுக்கடங்காமல் சென்றது. நேற்று வெள்ளி விலையும் 2 முறை உயர்ந்து காணப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காரணம் என்ன? அமெரிக்காவின் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்திருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும் முதலீட்டாளர்களின் கவனம் பெருமளவில் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை உயர்ந்து வருவதாக சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் கோல்டுகுரு சாந்தகுமார் தெரிவித்தார். கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800 (இன்று) 23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120 (நேற்று) 22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440 21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320 20.09.2025 ஒரு சவரன் ரூ.82,320 19.09.2025 ஒரு சவரன் ரூ.81,840

மூலக்கதை