மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர்

தினமலர்  தினமலர்
மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர்

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் அந்த படத்தின் கதை, அதில் அதிகம் இடம் பெற்ற தமிழ் கதாபாத்திரங்கள், தமிழ் வசனங்கள், குறிப்பாக நடிகர் கமல், அவரது குணா திரைப்படம், குணா குகை, கண்மணி அன்போடு பாடல் என பல விஷயங்களில் தமிழக ரசிகர்களுடன் ஈஸியாக கனெக்ட் ஆனது. அதனால் கேரளாவில் பெற்ற அளவிற்கு தமிழகத்திலும் அந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியும் வசூலும் கிடைத்தது. அந்த சமயத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், நிவின்பாலி நடிப்பில் உருவாகி இருந்த வருஷங்களுக்கு சேஷம் என்கிற படத்தின் டிரைலரும் அப்போது வெளியாகி இருந்தது.

அதை பார்த்துவிட்டு அதிலும் இதே போன்று தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் விதமான சென்னை சினிமா பின்னணியிலான கதைக்களம் இருப்பதால் இந்தப்படத்தை தமிழில் வெளியிடலாம் என நினைத்து தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்செயன் அந்த படத்தின் தயாரிப்பாளர் விசாக் நாயரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த தயாரிப்பாளர் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை விட இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் தமிழகத்தில் 14 கோடி பங்குத் தொகையாக வசூலித்து இருக்கிறது, அதனால் நீங்கள் வருஷங்களுக்கு சேஷம் படத்திற்கு 15 கோடி கொடுங்கள் என கேட்டதும் ஷாக் ஆகி விட்டாராம் தனஞ்செயன்.

அதன்பிறகு தமிழில் பல பேரிடம் அந்த மலையாள தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி எதுவும் சரி வராமல் போக வேறு வழியின்றி கடந்த ஏப்ரல் 11ம் தேதி தமிழகத்தில் உள்ள ஒரு விநியோகஸ்தர் மூலமாக அந்த படத்தை ரிலீஸ் செய்தாராம். நல்ல படம் தான் என்றாலும் இப்போது வரை அந்த படத்திற்கு தமிழகத்தில் பங்குத் தொகையாக வெறும் 75 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாம்.

இது குறித்து கூறியுள்ள தனஞ்செயன், எல்லா படமும் மஞ்சும்மேல் பாய்ஸ் போல ஆகி விடாது, அந்தப் படத்தின் வசூலை கணக்கில் கொண்டு தங்களது படத்திற்கு வியாபாரம் பேசக்கூடாது, இதனால் தயாரிப்பாளருக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை