'பிக் பாஸை' கண்காணிக்க தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

தினமலர்  தினமலர்
பிக் பாஸை கண்காணிக்க தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கமல்ஹாசன் நடத்தி வருவது போன்று மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார் மோகன்லால். தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. காதல், முத்த பிரச்னைகள் அவ்வப்போது பிக்பாஸில் ஏற்படும். மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி அடிதடி வரை சென்றிருக்கிறது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இந்தக் காட்சிகள் சில நாட்கள் முன்பு வெளியான எபிசோடில் ஒளிபரப்பப்பட்டது. இது மலையாள ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை மோகன்லால் எப்படி அனுமதித்தார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. நிகழ்ச்சியை பரபரப்பாக விளம்பரப்படுத்த ஏற்பாட்டாளர்கள் நடத்திய டிராமா என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த வழக்கு மனுவில் "பிக்பாஸ் நிகழ்ச்சி விதிமீறலில் ஈடுபட்டிருப்பதால், நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும். வன்முறை அடங்கிய காட்சிகளை ஒளிபரப்புவது பார்வையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கலாம்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், போட்டியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுகிறதா என்பதை தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் கண்காணிக்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது.

மூலக்கதை