மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு மொழிபெயர்ப்பு பயிற்சி.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்களுக்கு சென்னையில் உள்ள மொழி பெயர்ப்பு குறித்த பயிற்சி முகாம் ஏப்ரல் 6 முதல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

 

இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் கூறியதாவது: இந்த நிறுவனத்தில் கிபி 6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கி யம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், கட்டிடக் கலை, தொல் பொருளியல், நாணய வியல், கல்வெட்டியல், சுவடியல், பண்பாடு, மொழிபெயர்ப்பு உட்படப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வுகளும், கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன. 

 

அவை குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் விஷ்வ பாரதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கெனவே பயிற்சிகள் தரப்பட்டன. தொடர்ந்து தமிழ் இலக்கியங்களை இதர மொழிகளில் மொழிபெயர்க்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதில், தமிழ் கலைச்சொல் உருவாக்கம், தமிழ் சூழலை உணர்ந்து மொழிபெயர்க்கும் உத்திகள் உட்படப் பயிற்சிகள் வழங்கப்படும். 

 

இந்த திட்டத்தின் தொடக்கமாக மலேசியாவைச் சேர்ந்த 25 தமிழ்ப் பேராசிரியர்களுக்கு சென்னையில் ஏப்ரல் 6 முதல் 10-ம் தேதி வரை 5 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி தொடக்க விழாவில் மலாயா பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வ ஜோதி ராமலிங்கம் சிறப்புரையாற்றவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை