மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தும் 21-ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது.

 

விழாவில் 57 நாடுகளிலிருந்து 12 தமிழ்ப் படங்கள் உட்பட 126 படங்கள் திரையிடப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இதன் நிறைவு விழா சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

 

விழாவுக்கு இந்தோசினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் எஸ்.கண்ணன் தலைமை வகித்து, நடிகர் வடிவேலுடன் இணைந்து திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

 

 

விழாவில் சிறந்த தமிழ்ப் படமாக ‘அயோத்தி’ தேர்வு செய்யப்பட்டு, அப்படத்தின் இயக்குநர் ஆர்.மந்திரமூர்த்திக்கு ரூ.1 லட்சம் பரிசளிக்கப் பட்டது. தமிழில் 2-வது சிறந்த படமாக ‘உடன்பால்’ தேர்வானது. சிறப்பு ஜூரி விருதினை வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்துக்கு வழங்கப்பட்டது.

 

செம்பி பட குழந்தை கலைஞருக்கு சிறப்பு விருது

 

சிறந்த நடிகருக்கான விருதை ‘மாமன்னன்’ படத்தில் நடித்த நடிகர் வடிவேலு பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது ‘அயோத்தி’ படத் துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது மற்றும் சிறந்த எடிட்டர் விருது ‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய கலைச்செல்வனுக்கும், ஸ்ரீ ஜித் சாரங்குக்கும் வழங்கப்பட்டது. சிறந்த ஒலிப்பதிவாளர் விருதினை மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் ஜி பெற்றுக்கொண்டார். செம்பி படத்தின் குழந்தை கலைஞராக அறிமுகமான நிலாவுக்குச் சிறப்புக் குறிப்புச் சான்றிதழ் விருது வழங்கப்பட்டது. 

 

தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப் படம் - தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘லாஸ்ட் ஹார்ட்’ குறும்படம், சிறந்த குறும்படத்துக்கான விருதினை வென்றது. உலக சினிமாவுக்கான போட்டியில் முதல் பரிசை ருமேனியா நாட்டை சேர்ந்த ‘லிபெர்டேட்’ என்ற படமும், 2-ம் இடத்தை பிரேசில் நாட்டை சேர்ந்த ‘அக்ரெஸ்டே’ என்ற படமும் வென்றன. இந்நிகழ்வில் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பின் துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் இ.தங்க ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை