நான்கு ஓடிடி படங்களுக்குப் பிறகு தனுஷ் படம் தியேட்டர்களில்…

தினமலர்  தினமலர்
நான்கு ஓடிடி படங்களுக்குப் பிறகு தனுஷ் படம் தியேட்டர்களில்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, பிரெஞ்ச், ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். தனுஷ் நடித்து தியேட்டர்களில் கடைசியாக வெளிவந்த படம் 'கர்ணன்'. கடந்த 2021ம் ஆண்டு கொரானோ இரண்டாவது அலை தாக்கத்தின் போது அந்தப் படம் வெளியானது. 50 சதவீத இருக்கைகளுடன் அந்தப் படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாகவே அமைந்தது.

அந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்த தமிழ்ப் படமான 'ஜகமே தந்திரம்' மற்றும் ஹிந்தியில் நடித்த 'அத்ராங்கி ரே' ஆகிய படங்கள் கடந்த வருடம் ஓடிடியில்தான் வெளியானது. அதற்குப் பிறகு இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த 'மாறன்' படமும் ஓடிடியில்தான் வெளியானது. ஹாலிவுட்டில் நடித்த நெட்பிளிக்ஸ் படமான 'த கிரே மேன்' படமும் ஓடிடி ரிலீஸ்தான். ஓடிடியில் வெளியான இந்த நான்கு படங்களுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. குறிப்பாக 'ஜகமே தந்திரம், மாறன்' படங்களுக்கு மோசமான விமர்சனங்களே கிடைத்தன.

இந்நிலையில் நான்கு ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் நாளை தியேட்டர்களில் வெளியாக உள்ளது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பாவனி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'கர்ணன்' படத்திற்குப் பிறகு 'திருச்சிற்றம்பலம்' படம்தான் தியேட்டர் வெளியீடு என்பதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மூலக்கதை