ஆண்கள் டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது இந்தியா

தினகரன்  தினகரன்
ஆண்கள் டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது இந்தியா

காமன்வெல்த் ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் தங்கப் பதக்கம் வென்று பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. ஒற்றையர் ஆட்டங்களில் ஹர்மீத் தேசாய் 11-8, 11-5, 11-6 என்ற நேர் செட்களில் கிளாரன்ஸ் சூவையும், சத்தியன் ஞானசேகரன் 12-10, 7-11, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் என் கோயன் பாங்கையும் வீழ்த்தினர். நட்சத்திர வீரர் அசந்தா சரத் கமல் 1-3 என்ற செட் கணக்கில் (7-11, 14-12, 3-11, 9-11) அதிர்ச்சி தோல்வியடைந்த நிலையில், கடைசியாக நடந்த இரட்டையர் ஆட்டத்தில் சத்யன் - தேசாய் இணை 3-0 என நேர் செட்களில் சிங்கப்பூரின் யாங் ஐசக் - என் கோயன் பாங் ஜோடியை வீழ்த்தி அசத்தியது.* முதல்வர் பாராட்டுகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிந்த தகவலில், ‘காமன்வெல்த் ஜூடோவில் வெள்ளி, வெண்கலம் வென்றுள்ள சுசிலா தேவி மற்றும் விஜய்குமார் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். நமது பளுதூக்கும் அணியினரின் சிறப்பான செயல்பாடு குறிப்பாக மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. முழுத்திறனை வெளிப்படுத்தி வெண்கலம் வென்றுள்ள ஹர்ஜிந்தர் கவுருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை