நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு

தினமலர்  தினமலர்
நாட்டின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தின் வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு, அலைக்கற்றை விற்பனை நடைபெற்றுள்ளது.


இதற்கு முன் நடைபெற்ற 4ஜி ஏலத்தை விட இருமடங்கு அதிகமாகவும், 3ஜி ஏலத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவும் இந்த 5ஜி ஏலத்தில் தொகை கோரப்பட்டுள்ளது.இந்த ஏலத்தில், முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் ஜியோ’ அதிக தொகைக்கு ஏலம் கோரி, முதலிடத்தை பிடித்துள்ளது.இதற்கு அடுத்த இடங்களை, ‘பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. மொத்தம் 38 சுற்றுகள் ஏலம் நடைபெற்றன. ஏலத்தில், உத்தர பிரதேசம் கிழக்கு மண்டலத்துக்கான போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த மண்டலத்தில் 10 கோடி மொபைல் சந்தாரார்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால், இந்த இடத்தை பிடிப்பதில் ஏர்டெல் நிறுவனத்துக்கும், ஜியோவுக்கும் கடுமையான போட்டி நிலவியது.புதிய வரவான ‘அதானி’ குழுமம், அதன் தனியார் தொலைதொடர்பு ‘நெட்வொர்க்’ வசதிக்காக, ‘26 மெகா ஹெர்ட்ஸ்’ அலைக்கற்றையை இந்த ஏலத்தில் வாங்கியுள்ளது.


ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு, அவை கோரிய அலைவரிசையை மத்திய அரசு, வரும் செப்.,ல் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜியை விட 5ஜி அலைவரிசை ௧௦ மடங்கு அதிக வேகமாக இருக்கும். 5ஜி இணைப்பால், ஒரு முழு சினிமாவை ஒரு சில விநாடிகளில் பதிவிறக்கலாம்.விரைவில் 5ஜி அறிமுகம் ஆக உள்ளதை அடுத்து, இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை