அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும்



புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ அறிவித்துள்ளது.


இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆண்டின் துவக்கத்தில் அனல் காற்று வீசியது, பணவீக்கத்தை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உணவு பொருட்களின் விலை, கடந்த நிதியாண்டை விட இரு மடங்கு அதிகரித்து விட்டதால், பணவீக்கமும் உயரும். நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும்.


தற்போது உணவு பிரிவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு, புவிசார் அரசியல் சூழல் மட்டுமின்றி, உள்நாட்டு காரணிகளும் முக்கிய பங்கு வகித்துள்ளன.ஆண்டின் துவக்கத்தில் அனல் காற்று வீசியதால், வடமேற்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள மாநிலங்களின் வெப்பநிலை 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.


இது கோதுமை, நிலக்கடலை போன்றவற்றின் உற்பத்தியை பாதித்துள்ளது.உணவு பொருட்கள் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் வரை, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பணவியல் கொள்கையை மேற்கொள்வது கடினமானதாக இருக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை