மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது

தினமலர்  தினமலர்
மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது

புதுடில்லி–நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை எட்டிஉள்ளது.கடந்த ஜூலை மாதத்தில், குறிப்பிடத்தக்க வகையில் ‘ஆர்டர்’கள் அதிகரித்ததை அடுத்து, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.


‘எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி என பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களின், ஜூலை மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தாண்டு ஜூலை மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான பி.எம்.ஐ., குறியீடு, 56.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஜூன் மாதத்தில் 53.9 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். மே மாதத்தில் இக்குறியீடு, 56.4 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேன்றத்தை உணர்த்தியுள்ளது.


கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து, பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.ஜூலை மாதத்தை பொறுத்தவரை புதிய ஆர்டர்கள் கிடைத்ததன் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. கடந்த நவம்பருக்கு பிறகான வேகமான வளர்ச்சி இதுவாகும்.தயாரிப்பு துறையில் வளர்ச்சி அதிகரித்தபோதும், வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


கிட்டத்தட்ட 98 சதவீத நிறுவனங்களில் ஜூலை மாதத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலையில் குறிப்பிடத்தக்க வகையில் ஆர்டர்கள் அதிகரித்ததை அடுத்து, எட்டு மாதங்களில் இல்லாத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கேற்ப பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை


மூலக்கதை